Friday, August 7, 2020

வெட்கத்தின் வளைவு

மனம் திறந்து சொல்லியிருக்கலாம் மடிந்த வார்த்தைகள் உயிர் பெற்றிருந்தால்

உன் வெட்கத்தின் வளைவுகளிலே கண்டறிந்திருக்கலாம்
நீயும் நான் போல என்று
வார்த்தை சேகரிப்பில்
வாழ்க்கையை நழுவ விட்டோம்
நம் விலகலுக்கு விதிகள்
செய்து கொண்டது ஒப்பந்தம்
வாழ்க்கைப் பாதையில்
நாம் முட்டிகொண்ட
மணித்துளிகளை மறக்க
முயற்சிப்போம்
நீயும் அதிர்ஷ்டசாலி
நானும் அதிர்ஷ்டசாலி
நாம்தான் துரதிர்ஷ்டசாலி...

மின்சாரப்பார்வை

சிதறி விழும் நினைவுத்துளிகளில் உன் முகம் தேடினேன்.. அலட்சியங்களை அடுக்கி வைத்திருந்த உன் கண்கள் மட்டும் தென்பட்டது..

அந்த மின்சாரப்பார்வையில்
உருகிப்போனதுதான் என் இதயம்..
மீண்டும் உருப்பெறவேயில்லை..
என்றைக்கோ
உன்னை விட்டுப் பிரிந்தேன்..
நீ விட்டெறிந்த என்னைப் பொறுக்கிக்கொண்டு.....
நீ கீறிச்சென்ற காயங்கள்
வேண்டுமானால் மறைந்திருக்கலாம்..
வடுக்கள் மறையப்போவதில்லை..
அதில்தான்..
உன்னை நினைவுப்படுத்துவதும்
நான் அவ்வப்போது தடுக்கி விழுவதும்....!!!

கனவுகளில் குவிந்திருப்பவளே

என் கனவுகளில் குவிந்திருப்பவளே

உன் ஜன்னல் பிம்பம்
தோன்றும்போதெல்லாம்
என் இதயம் வேர்த்திருக்கும்
என் விழியின் நிழல் கூட
உன்னைத்தான் பார்த்திருக்கும்
எப்போதாவது விழிக்கும்
உன் புன்னகை கண்டு
என் நெஞ்சம் பூத்திருக்கும்
நீ வீசும் நேசத்துக்காக
என் உயிர் துடிப்புகள் காத்திருக்கும்
என் மொழிகளையெல்லாம்
உன் மௌனங்கள்தான் திருடியிருக்கும்
உன் பாதம்பட்ட இடங்களைத்தான்
என் பார்வைகள் வருடியிருக்கும்
நீ பற்றிப் பிடித்திருக்கும்வரை
என் ஜீவன் என்னுள் உறைந்திருக்கும்
நீ விலகி விடும் கணம்
அது என்னைவிட்டு மறைந்திருக்கும்...

நான் பைத்தியமில்லை

என் விழித்திரையில் உன் பிம்பத்தை வைத்துத் தைத்தாற்போல் நான் பார்க்கும் இடமெல்லாம் உன் உருவத்தைத்தான் உணர்கிறேன் …

ஆனால் நான் பைத்தியமில்லை….
ஒரு நாளைக்கு உன் பெயரை
எத்தனை முறை உச்சரிக்கின்றேன் என்று
எனக்கே தெரியவில்லை….
என் உதடுகள் திறப்பதெல்லாம்
உன் பெயரை உச்சரிக்க மட்டுமே…
ஆனால் நான் பைத்தியமில்லை….
என் வீட்டுச்சுவர்களில் ரத்தத்தால்
உன் பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்
அதனை காற்று கூட
தழுவ விடுவதில்லை நான்…
ஆனால் நான் பைத்தியமில்லை…
என்னை உதறிவிட்டுச் சென்றபோது
நீ விட்டுச்சென்ற கொலுசு மணிகளை
என் கைகளில் கட்டிக்கொண்டிருக்கின்றேன் …
ஆனால் நான் பைத்தியமில்லை…
ஆனாலும்
என்னை எல்லோரும்
அப்படித்தான் சொல்கிறார்கள்...!!

மௌனங்களின் பரிமாற்றங்கள்

மௌனங்களின் பரிமாற்றங்கள் தான் நமக்குள்…

சொல்ல நினைத்து
சொல்லாமல் விலகும் நீ…
மொழியாக மாறும் முன்
வார்த்தைகளை விழுங்கும் நான்…
பாதசாரிகளாக செல்கிறோம்
எதிரெதிர் திசைகளில் ....
பார்வைகள் மட்டும்
பயணம் செய்யும் ஒரே திசையில் ..

காத்திருப்பேன் தனியே

கருங்கூந்தல் அசைய வந்த பூங்குயிலே.. என் மனப்பந்தல் சரிந்து போனதெங்கே...

தென்றலைத் துழாவி
தேனாய் வந்தாய்..
உன் தேகத்தை குவித்து
ஒரு பார்வை தந்தாய்...
நீ விட்டுசென்ற வாசங்கள்
இங்கே மணக்கும்..
அவற்றை சுவாசிக்கும்போதேல்லாம்
ஏனோ என் மனம் கணக்கும்...
நீ தீண்டிய கிளிஞ்சல்களை
கடல் வந்து தேடுதடி..
அவற்றின் அலைகள் கூட
உனது சந்தம் பாடுதடி...
எப்பொழுது திரும்பி வருவாய்
என் கனியே..
அதுவரை காத்திருப்பேன்
நான் தனியே....!

புத்தாண்டு

புத்தாண்டு பரிசாக உனக்கு என்ன தரலாம் என யோசித்தது என் மனம்..

பூக்களைத் தரலாம்
அதை உன் புன்னகையில் வைத்திருக்கிறாய்..
மருதாணிக் கற்றைகளைத் தரலாம்
அதை முகங்களில் பூசியிருக்கிறாய்..
கவிதைப்புத்தகங்கள் தரலாம்
அதை உன் கண்களில் வைத்திருக்கின்றாய்..
சிந்தித்து சிந்தித்து
சித்தம் கலங்கிப்போனது..
இதயத்தையாவது பெயர்த்தெடுத்து
அனுப்பியிருக்கலாம்.
உனக்கு அசைவம் பிடிக்காதே..
இதோ என் ஆன்மாவை அனுப்பியுள்ளேன்
விருப்பமென்றால் வாங்கிக்கொள்
இல்லையெனில்
என் மரணச்செய்தியை தாங்கிக்கொள் ...

தா

 தா..

என்னைப்பார்க்கும்பொது
உன் கண்களில் கனிவைத் தா..
என்னுள்
என்னை நுழைத்துக் கொள்வேன்..
தா..
உன் உதடுகளில்
புன்னகையைத் தா..
நான் தழைத்துக்கொள்வேன்..
தா..
ஆம் என பதில் தா..
இல்லையெனில்
எப்போதோ எடுத்துச் சென்ற
என்னுயிரைத் திருப்பித் தா..
நான் பிழைத்துக் கொள்வேன்..

வாலிபத்துக்கு வண்ணம் கொடுத்தவள்

உன்னை உணரும்முன் காதலை உணர்ந்தேன் ராசாத்தி..

உணர்ந்தபோதெல்லாம்
இதயத்தில் பற்றியது ரோஜாத்தீ..
உன் மௌனம் கேட்டு கேட்டே
ஊமையானேன் ராசாத்தி..
உன் நினைவு தீண்டும்போதெல்லாம் வரும்
கண்ணீரை மறைப்பேன் விழிசாத்தி..
உன் உடலை நான் எப்பொழுதும்
ரசித்ததில்லை ராசாத்தி..
உன் உதடுகளை நினக்கும்பொழுது மட்டும்
என்னுள் பரவும் பசலைத்தீ..
என் வாலிபத்துக்கு வண்ணம்
கொடுத்தவள் நீதான் ராசாத்தி..
நீ மறந்துவிட்ட அந்த நினைவுகளை
நெஞ்சில் வைத்திருக்கிறேன் பூச்சுத்தி..
கடைசி மூச்சு வரை உன்
காதல் சொல்வேன் ராசாத்தி..
அது போனபின்னே
உன்னை விட்டுச்செல்வேன் ஊரைச்சுத்தி..

உனக்காகத்தான் உலகில் விழுந்தேன்

உனக்காகத்தான் உலகில் விழுந்தேன்...

உன் குரல் கேட்க
செவிகள் மலர்ந்தேன்...
உன் முகம் பார்க்க
விழிகள் திறந்தேன்...
உன்னைக் காணாமல்
கதறி அழுதேன்...
உன் வாசம்
நுகர்ந்து சிரித்தேன்...
உனைப் பார்த்து விடலாம்
என்ற நம்பிக்கையில் வளர்ந்தேன்...
நீ விரும்புவாய் என
நினைத்து விரும்பினேன்...
காலங்கள் ஓடிக்கொண்டிருக்க
காத்திருக்கிறேன்...
இப்பொழுதான் நீ
இங்கில்லை என அறிகிறேன்...
உன்னைத்தேடி உலகைவிட்டு
இதோ வருகிறேன்...

என் கவிதைகளின் வார்த்தைகள் நீ

என் கவிதைகளின் வார்த்தைகள் நீ

உன் கனவுகளின்
பிம்பம் நான்..
நம் மொழிகள் சந்திக்க
தவமிருந்தேன்..
நம் விழிகளின் சந்திப்பிலேயே
உடைந்து போனேன்..
என்னைப் பார்த்தால்
உன் கொலுசுகள் கூட
மௌனம் கொள்கிறது..
உன் நிழல் நகரும்
ஓசை மட்டுமே
என் காதில் கேட்கிறது..
கடிதங்கள் கிழித்தெறியத்தான்
ஆண்டவன் உனக்கு
கைகள் கொடுத்தானா..
அலட்சியங்களை
அவிழ்த்து விடத்தான் உன்
கண்கள் படைத்தானா..
காதலை ஏற்க ஏன் மறுக்கிறாய்..
உன் இதயத்தில் கேட்டும் என்னை
ஏன் வெறுக்கிறாய்..
புரிந்து கொள்ளும் சக்தி
உன் உள்ளத்திற்கு
இல்லாமல் போயிருக்கலாம்..
எரிந்துவிடும் சக்தி
என் உடம்பிற்கு உண்டு..

அர்த்தமற்றவர்களின் புலம்பல்

உனக்கு அவ்வளவாக கவிதைகள் பிடிப்பதில்லை

கவிதையைத் திட்டுகிறாய்..
உன்னையே நீ திட்டலாமா...!
காரணம் கேட்டால்
கவிதை வயிற்றுக்கு
சோறுபோடாது என்கிறாய்..
கவிதை, காதலுக்கு சோறு போடும்..!
கவிதை அர்த்தமற்றவர்களின்
புலம்பல் என்கிறாய்..
உன் பெயரை உச்சரிப்பவர்கள்
அர்த்தமற்றவர்களா என்ன..!
உருப்படியாக எதாவது
செய்யுங்கள் என்கிறாய்..
உன்னை காதலிப்பதை
வேறு என்னவென்று நினைத்தாய் !!!

நிழல்களை சேகரித்தவன்

உன் நிழல்களை சேகரித்தவன் நான்...

கொலுசு மணிகளை மோதவிட்டு
அசையும் உன் நினைவு,
என்னுள் புகுந்த ஆன்மா..
.
என் இதயச்செல்களை
சுரண்டிப் பார்ப்பதில்
அப்படிஎன்ன சந்தோஷம்
உனக்கு...
உனக்காக எழுதிய
கவிதைகளை வைத்திருந்தால்
தொல்காப்பியம் கூட
தோற்றுப்போயிருக்கும்...
உன் தூரப்பார்வையில் மட்டுமே
தெரிந்தவன் நான்...
என் பார்வைகளைப் புதைத்து
நீரூற்றியவளே...
நீ கிடைக்கவில்லையென்ற
வருத்தம் இல்லை எனக்கு
நான் தொலைந்துபோன
வருத்தம்தான்...
என்றைக்காவது என்னை
கண்டுபிடித்துவிடுவேன் - பிறகு
நிச்சயமாக மீண்டும் தொலையமாட்டேன்
உன்னிலும் கூட...!!!

ரோஜா நினைவு

என்னை விட்டுத்தான் நீ விலகினாய்.. என் நினைவுகளை விட்டு அல்ல...

ஏன் அவற்றை நீ
அள்ளிச்செல்லவில்லை..
அழிந்துவிடும் என்று நினைத்தாயா...
உன் நினைவுகளை
என் நினைவுகளிலிருந்து
நீக்கவேண்டும் என்ற நினைவே
எனக்கு இல்லை...
அந்த ரோஜா நினைவுகளை
பொசுக்கித் தள்ள
எனக்கு மனமில்லை...
நீதான் கனவுகளை
நிர்மூலமாக்கிக்
கணவனைத் தேடிக்கொண்டாய்...
நான் காகிதங்களில்
கவிதைகளாகத்தான்
கரைந்து கொண்டிருக்கிறேன்...!

பழைய நினைவுகள்...

பசுமரத்து ஆணியாய் பதிந்து போன என் பழைய நினைவுகள்...

ஆற்றங்கரையில் ஒன்றாக
அமர்ந்து மீன் பிடித்ததும்..
முழங்கால்கள் நனைய
நீரில் விளையாடியதும்..
கூடி உட்கார்ந்து
கூட்டாஞ்சோறு ஆக்கியதும்..
உனக்கு பிடித்தது எனக்கு பிடித்ததும்
எனக்கு பிடித்தது உனக்கு பிடித்ததும்..
பசு மரத்து ஆணியாய்
என் மனதில்....
தொட்டுக்கொண்ட
அந்த ஸ்பரிசங்கள்
அப்போது விளங்காவிடினும்
பிறகு புரிந்து போனதடி எனக்கு..
உனக்கு அது புரியும் முன்னே
நீ வேறொருவன் வீட்டுக்கு
விளக்கேற்றச் சென்றுவிட்டாய்..
எனக்கும் என் நிழலுக்கும்
இடையில் நீ வாழ்ந்து விட்டுப்
போயிருந்தாலும்
என் உயிர்க்கற்றைகளை
உறிஞ்சிச் சென்றுவிட்டாய்...
என்றைக்காவது நீ திரும்பி வருவாயென
இப்போதும் உனக்காக
கூட்டாஞ் சோறு ஆக்கிக் கொண்டு
கன்னத்தில் கைதாங்கி
உட்கார்ந்திருக்கின்றேன்
என் கல்லறை மீது...

மௌனங்களின் பரிமாற்றங்கள்

மௌனங்களின் பரிமாற்றங்கள் தான் நமக்குள்…

சொல்ல நினைத்து
சொல்லாமல் விலகும் நீ…
மொழியாக மாறும் முன்
வார்த்தைகளை விழுங்கும் நான்…
பாதசாரிகளாக செல்கிறோம்
எதிரெதிர் திசைகளில் ....
பார்வைகள் மட்டும்
பயணம் செய்யும் ஒரே திசையில்

தூரமாகப் போய்விட்டாய்...!

 தூரமாகப் போய்விட்டாய்...!

எப்படி விலக்குவேன்,
என் விழிகளில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் உருவங்களை...!
என் உயிர்க்குமிழிகள்
உன்னைத்தேடி
அலைந்து கொண்டிருக்கின்றன...!
அவற்றைக் கேட்டுப்பார்..
சுழன்றுக் கொண்டிருக்கும்
என் இதயச் சூறாவளிகளை
உனக்குச் சொல்லும்..!
எனக்குத் தெரியும்
நீ என்னை
நெருங்கப் போவதில்லையென..!
என் சுவாசம் வாங்கிய காற்று
என்றைக்காவது
உன்னைத் தொடும்..
சுடும்....!
அப்போது உணர்ந்து கொள்வாய்
அந்தக் காதலின் வெப்பத்தை....!!!

என்னைத் திறந்தவளே..!

என்னில் மூழ்கி என்னையெடுத்து எனக்குத் தந்தவள் நீ...!

என் இதயப்பிரதிகளை
நீயும் எடுத்துச் சென்றிருக்கிறாய்..!
ஞாபகமிருக்கிறதா தோழி..!
என் மனப்பிம்பங்களை
உன் விழிகள் படம் பிடித்ததை...!
அவற்றை
எனக்கு அனுப்பி வைப்பாயா...!
என் உயிர்க்கூட்டுக்குள்
உடைந்து கிடக்கும்
இதயச்செல்களை ஒட்டவைக்க...!
சிநேகிதியாய் அனுப்பி வை..!
காதலனுக்காக வேண்டாம்
ஒரு
கவிஞனுக்காக அனுப்பி வை....!

ஊமைக்காலத்தில்

மரங்களின் கீழ் இலைமுகிலின் மழையில் நனையும் பொழுது உன் ஞாபகம்...!

என் மனதின் மடியில் படுத்துறங்கும்
விலகிய காலங்கள்
விழித்துக்கொள்ளும்...!
மௌனங்களின் சத்தத்தில்
பார்வைகளின் யுத்தத்தில்
நாம் பாதை போட்டுக்கொண்ட
ஞாபகம்...!!
நாம் இன்னும் நெருங்கியிருக்கலாம்..
இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால்...!!
காதலும் நட்பும்
அடித்துக்கொண்டன..
நீயா..
நானா..
என்று...!
நீ ஆரம்பத்திலேயே
முடிவு எடுத்து விட்டாய்..
உன் முடிவுக்குப்பிறகும்
நான் ஆரம்பத்திலேயே இருக்கிறேன்...!
நீ என்னுடன்
இருந்த நேரங்களை விட
இல்லாத நேரங்களில்தான்
நீ என்னுடன் அதிகமாக
இருந்திருக்கிறாய்..!
நேரங்களையும் யுகங்களையும்
உதறித்தள்ளி காத்திருப்போம்..
உலகம் உருகிப்போயிருக்கும் ஒரு
ஊமைக்காலத்தில் சேர்ந்திருப்போம்...!!!