Monday, October 1, 2012

என் இதயத்தின் நான்கு அறைகளிலும் நீ


என்னை ஏற்றுக்
கொள்ளாவிட்டாலும்
பரவாயில்லை.
என் காதலையாவது
ஏற்றுக்கொள்.








ஒரு கணமேனும்
உன்னை மறந்துவிட ஆசை.
நான் என்னைப் பற்றி
நினைத்துப் பார்த்து
வெகு நாளாயிற்று.







உன் அறைக்குள்
என் வரவை தடுக்கிறாய்.
என் இதயத்தின்
நான்கு அறைகளிலும்
நீ இருப்பதை அறிவாயா?










தினம் தினம் புதுப் புது உடைகள்

மாற்றிகொள்கிறாய்.
மனதை மட்டும் அப்படியே
வைத்துக்கொண்டு.



Sunday, September 9, 2012

நம் காதலுக்கு நான் மட்டுமே பலி




உன் வார்த்தைகளை எப்போதும்
நான் மதிக்கிறேன்.
என்னை நினை சொன்னது நீதான்.
மறந்துவிடு என சொல்லவாவது
ஒரு முறை வந்து போ






ஒரு நாள் அழுவாய்
என்னை நினைத்து.
உன்னை நினைத்து
அழும் என்னை போல.






உன் விலகல் 
எனக்கு மட்டுமே வலி

நம் காதலுக்கு
நான் மட்டுமே பலி.




ஆற்று மணலில் முன்பு
நாம் தொலைத்த தடம் தேடி
இப்போது நான் மட்டும்..



Sunday, September 2, 2012

நினைக்காமல் என்னால் இருக்கமுடியும்



உன்னை நினைக்காமல்
வேண்டுமானால்
என்னால் இருக்கமுடியும்.
உன்னை மறந்துவிட்டெல்லாம்
என்னால் இருக்கமுடியாது.











கடிதங்களை கிழித்து போட்டுவிடு
எனச் சொல்லிப் போனாய்.
உனக்கு வேண்டுமானால் 

அவை வேதனைகளாக இருக்கலாம்.
அவைதான் எனக்கு வேதங்கள்.

Tuesday, August 21, 2012

நாதஸ்வரம் டைரக்டர் நல்லவரா? கெட்டவரா?


டைரக்டர் ஹீரோவானால் என்ன அட்வாண்டேஜ்? அவங்க விரும்பின
கேரக்டர்களில் நடிச்சுக்கலாம். பிடிச்ச ஹீரோயினை 'பிடிச்சி போட்டுக்கலாம்'.
தங்கள் விருப்பம் போல் பில்டப் கொடுத்து பந்தா பண்ணலாம்.

இந்த லிஸ்டில் இயக்குனர்கள் சுந்தர்.சி, எஸ்.ஜே.சூர்யா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சின்னத்திரையை பொறுத்தவரையில் நாதஸ்வரம் இயக்குனர் திருமுருகனை
இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

இந்த சீரியலில் இவர் பெயர் கோபி. அப்பாவி கேரக்டர். அன்பான கணவன்(ஹோம்லியான அழகான ஹீரோயினை பிடித்து போட்டிருக்கிறார்). பொறுப்பான அண்ணன். எல்லாம் சரி. ஆரம்பத்திலிருந்து இந்த சீரியலை பார்த்து வருகிறவர்களுக்குத் தெரிந்திருக்கும். தொடரில் இவரைத் தவிர மற்ற ஆண்கள் யாருமே நல்லவர்கள் இல்லை.

கோபியின் தம்பி பாண்டியை ஆரம்பித்திலிருந்து ஒரு பொறுக்கியாக காண்பித்து கடைசியில்
ஆளை காலி பண்ணிவிட்டார்கள். தங்கச்சி புருஷன் செல்வரங்கம் முதலில் நல்லவரகத்தான் இருந்தார்.
பிறகு சின்னவீடு செட்டப் ஆது இது என இமேஜை கெடுத்துவிட்டனர்.

ஹீரோயினை முதல் திருமணம் செய்த கோகுல் ஒரு சைக்கோ. ஹீரோயின் அண்ணன் ஒரு குடிகாரன்.
சித்தப்பாவின் மூத்த மருமகன் கோபக்காரன். அம்மா பேச்சை கேட்டு மனைவியை கொடுமை படுத்துகிறான். கோபியின் தங்கை பரமுவுக்கு முதலில் பார்த்த மாப்பிள்ளை ஒரு ரவுடி.
பரமுவின் கணவன் மனைவி பேச்சை கேட்டு அம்மாவை மதிப்பதில்லை..பக்கத்து வீட்டு ஜோசியக்காரன் வில்லன்.
பிறகு கோபியின் சித்தப்பாவும் வில்லனைகிவிட்டார்.

தற்போது கோபியின் இரண்டாவது தங்கை ராகினிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை இன்னொரு சைக்கோ. இதுதவிர மகா என்ற பெண் கேரக்டரிடம்  ஜொள்ளு விடும் வாத்தியார் ஒருவரும் இருக்கிறார்.

கோபியின் அத்தை பையனாக வரும் சம்பந்தம் நல்லவன். அப்பாவி.  என்றாலும் அரை லூசு போலவே காட்டுகிறார்கள்.

இப்போது புரிகிறதா இயக்குனரின் சாமர்த்தியம்.

இருந்தாலும் தொடர் விறுவிறுப்பாகதான் இருக்கிறது. ஹீ..ஹீ.






Thursday, July 5, 2012

நான்கூட இருப்பதில்லை என் அருகில்




நீ நேரில் வருவதை விட
என் கனவில் வருவதையே
அதிகம் விரும்புகிறேன்.
அதில்தான்
உன் புன்னகையை
காணமுடிகிறது.





என் முகம் எடுத்துத் துடைத்துக்கொள்,
உன் நிழலில் படிந்த
வியர்வைத் துளிகளை.





என் பார்வைகளில்
எப்போதும்
தடுமாற்றம் இருந்ததில்லை,
இந்த கழுத்துச் சங்கிலி
எனக்கு எப்படி இருக்கிறது
என நீ கேட்டபொழுது தவிர.







நீ என்னருகில்
இருப்பது போல்
நான்கூட இருப்பதில்லை
என் அருகில்.



Sunday, June 24, 2012

இதயத்தை எங்கு கழற்றி வைத்தாய்





நீ விலகிச் சென்றது
எனக்கு வருத்தமில்லை.
என்னை நேசித்த
உன் இதயத்தை
எங்கு கழற்றி வைத்தாய்
என்பதை மட்டும்
சொல்லிவிட்டு செல்.





தூறலின் போது தொடங்கி
மழை வரும்முன்
முடிந்துபோனதோ
நம் வசந்த காலம்.








வண்ணங்கள்
உன்னை நினைவுபடுத்தும்,
உன் சிவப்பு இதழாகவோ
உன் கருப்பு இதயமாகவோ



Friday, June 15, 2012

உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்




உன்னை மறக்கத்தான்
நினைக்கிறேன்.
உன்னை மறந்துவிட்டு
வேறு எதை நினைத்துக் கொண்டிருப்பது
என புரியாமல் தவிக்கிறேன்.




என் காயங்கள் மட்டுமே
உன்னை நினைவுபடுத்துகின்றன.
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என்னுள் காயங்கள்.



Saturday, June 2, 2012

நீ இமை மூடும் கணம்



என் சிறிய கவிதைகள்
உன் நீண்ட நெருக்கத்தில்.
என் நீண்ட கவிதைகள்
உன் சிறிய பிரிவில்.



நம் சந்திப்புகள் பெரும்பாலும்
என் கவிதைகளில் முடியும்.
என் கவிதைகள் பெரும்பாலும்
சோகத்தில் முடியும்








என் பார்வைகள் பறிபோகும்
நீ இமை மூடும் கணம்.

Thursday, May 31, 2012

உன் நிழலையாவது எனக்கு தா





உனக்கு இதயம்
இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அதை செதுக்கித்தானே
இதழ்கள் செய்து கொண்டாய்.






பூக்களை அவ்வளவாக
விரும்புவதில்லை நான்
உன்னை விரும்பியதற்கு
கிடைத்த தண்டனையே போதும்.








மழைக்கு இதம்,
உன் நினைவால் கொதிக்கும்
என் இதயம்.










என் வெளிச்சங்களை
வேண்டுமானால் எடுத்துக்கொள்
உன் நிழலையாவது எனக்கு தா.




Tuesday, May 22, 2012

கண்ணில் ஏன் காதலே இல்லை




காதலுக்கு கண் இல்லை
என்றுதானே சொன்னார்கள்.
உன் கண்ணில் ஏன்
காதலே இல்லை?






மழை பெய்து முடிந்தபின்
எழுமே மண்வாசனை?
அப்படித்தான்
உலகம் உறங்கிய பிறகு
என்னிலிருந்து எழுந்துகொள்கிறது
உன் நினைவுகள்.




பல சமயங்களில்
கவிதை எழுதிகொண்டிருப்பேன்
உன் பார்வையைபோல.

சில சமயங்களில் சிந்தித்துகொண்டிருப்பேன்
உன் சிரிப்பைபோல

அடிக்கடி அழுதுகொண்டிருப்பேன்
உன் அலட்சியத்தைபோல




உன்னை காதலிக்க
ஆரம்பித்ததிலிருந்து
தூக்கத்தில் கனவுகள் வருவதில்லை.
விழித்திருக்கும்போதுதான்
எத்தனை கனவு?






நாளுக்கு நாள்
நான் எடை குறைந்து வருகிறேன்.
ஏன் அன்பே
நீ சரியாக சாப்பிடுவதில்லையா?

Tuesday, May 1, 2012

நான் பார்க்காதபோது எப்படி இருப்பாய் நீ





நான் பார்க்கும் போதெல்லாம்
அழகாக இருக்கிறாயே
நான் பார்க்காதபோது
எப்படி இருப்பாய் நீ?









நீ அவிழ்த்து போட்டிருக்கும்
ஆடைகளின் அழகு
நீ அணிந்து இருக்கும்
ஆடைகளில் ஏனோ இருப்பதில்லை


.

ஒரு நாள் கனவில் 
நீ அழுதாய்?
விடிந்து பார்த்தேன்
என் கண்கள் ஈரம் கசிந்திருந்தன

Monday, April 30, 2012

ஒரு பூ எழுதிய மடல்







அன்புத்தோழி

நலம். நலமறிய ஆவல்.

உன் கடிதம் கிடைக்கப்பெற்றேன்.
இல்லை இல்லை.
உன் கடிதம் கிடைக்க உயிர் பெற்றேன்.

உன் கடிதத்திலும் எழுத்துக்கள் உன்னைப்போல,
கொஞ்சமாய் தலை குனிந்தே இருக்கின்றன.

பூக்களில் மடல்கள் பார்த்திருக்கிறேன்.
நீ எழுதிய மடலில்தான் எத்தனை பூக்கள்?

வார்த்தைகளை வருடிப் பார்க்கிறேன்.
வார்க்கப்பட்டதா? அல்லது வரையப்பட்டதா?

உன் விழிகளில் உள்ள உயிரோட்டத்தை
எப்படி இந்த காகிதத்தில் கொண்டு வந்தாய்?

உன் மடலை பருகுவது என் கண்கள்தான்.
ஆனால் என் நாசி தேன் சுவை உணர்கிறது.

உன் எச்சில் பட்ட கடிதத்தின் ஓரம்.
என் உதடுகள் உரசியும் காயவில்லை ஈரம்.

வாய் மூடி வாசித்தும்
என்னை சுற்றி எதிரோலிக்கிறன
உன் எழுத்துக்கள்.

வாசிக்கிறேன் வாசிக்கிறேன்.
எத்தனை முறை என பிறகு யோசிக்கிறேன்.

Thursday, April 12, 2012

உன் நினைவின் பாரம் தாங்காமல்




நடக்கையில் புதைய
முற்படுகின்றன கால்கள்
உன் நினைவின்
பாரம் தாங்காமல்.








என் கடிதங்கள் எதற்குமே
பதில் எழுதியதில்லை
நீ.
தயக்கம் என் நினைத்திருந்தேன்.
பிறகுதான் புரிந்தது
இது தற்காப்பு என்று.




இதய மாற்று அறுவை சிகிச்சை
கடினம் என
கேள்விபட்டிருக்கிறேன்.
உனக்கு மட்டும்
அது எப்படி சுலபமாயிற்று?







உயிர்களை கொல்வது பாவம்
என்று அடிக்கடி சொலவாய்.
என் விஷயத்தில் உனக்கு
ஏன் அது தோன்றவில்லை.




Thursday, March 22, 2012

நீ காதலித்த எதையாவது கொடு


நான் உன் கதவை தட்டவில்லை.
ஜன்னலை தட்டுகிறேன்.

விழிகள் மூடிக்கொள்ளத்தான்
இமைகள்.
இதயத்தையும்
ஏன் இமைகளால் மூடுகிறாய்.

நான் உன் முகம்
பார்க்க கேட்கவில்லை
உன் முகம் பார்த்த
கண்ணாடி பார்க்கக் கேட்கிறேன்.

நான்
உன் காதல் கேட்கவில்லை.
நீ காதலித்த
எதையாவது கொடு
என கேட்கிறேன்.

Thursday, March 8, 2012

இமைகளுக்கு இடையில் நீ




பலமுறை கேட்டும்
நீ
இதற்கு பதில் சொன்னதில்லை.
ஒரு வேளை
உன் அழகின் ரகசியம்
இதுதானோ?





இருள் வரும்போதெல்லாம் 
இடறி விழுகிறேன்
இமைகளுக்கு இடையில்
நீ






உன் ஒவ்வொரு
கண் சிமிட்டலும்
எனக்கு கவிதை



சமயங்களில்
நான் உறங்குவதில்லை,
உன் நினைவு கலைந்துவிடுமோ
என்ற கவலையில்.






உனக்கும் எனக்குமான தூரத்தை
இதுவரை
நான் கணக்கிட்டதில்லை.
அதுதான்
உன்னை நினைக்க
ஆரம்பித்த மாத்திரத்தில் சட்டென
என் இமைகளுக்கிடையில்
இடம் பெயர்ந்து விடுகிறாயே?


.

Wednesday, January 25, 2012

உன் நிழலும் அழகாய்தானிருக்கிறது




மழையில் நனைந்த
உனக்கு எதுவும் ஆகவில்லை.
நீ நனைவதை பார்த்த
எனக்கு எப்படி வந்தது
குளிர் காய்ச்சல் ?








காற்றில் பறக்கும் கூந்தலை
சரி செய்கிறாய்,
என் மனதை கண்டபடி
கலைத்துவிட்டு.




நீ மட்டுமல்ல
உன் நிழலும் அழகாய்தானிருக்கிறது











விடிந்துவிட்டது எழுந்திரு
போதும் என் விழிகளில்
நீ உறங்கியது










நீ என்னை மட்டுமே பார்க்கவேண்டும்
அதனாலதான்
உன் புகைப்படத்தைகூட
யாருக்கும் தருவதில்லை
நான்.