Thursday, June 17, 2010

ராவ‌ண‌ன் - விம‌ர்ச‌ன‌ம்


விக்ர‌ம் ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌ன் ம‌க்க‌ளுக்காக போராடுகிறார். சில போலிஸ்கார‌ர்களைப் போட்டுத்த‌ள்ளுகிறார். காட்டுக்குள் ஒரு அரசாங்க‌ம் ந‌ட‌த்துகிறார்க‌ள் விக்ர‌மும் அவ‌ர‌து அண்ண‌ன் பிர‌புவும். அந்த‌ ஊருக்கு மாற்ற‌லாகி வ‌ருகிறார் எஸ்.பி பிருத்விராஜ் த‌ன் அழ‌கான ம‌னைவி ஐஸ்வ‌ர்யாராயுட‌ன்.


விக்ர‌ம் த‌ங்கை பிரியாம‌ணி திரும‌ண‌த்தில் த‌டால‌டியாக‌ உள்ளே நுழைந்து விக்ரமை சுட்டுவிட்டு பிரியாம‌ணியை தூக்கிச்செல்கிறார் பிருத்விராஜ். விக்ர‌ம் த‌ப்பிவிடுகிறார். ப்ரியாம‌ணியை போலிஸ் ஸ்டேச‌னில் வைத்து சின்னாபின்னமாக்கின்ற‌ன‌ர் சில காவ‌ல்துறை அதிகாரிக‌ள். பிரியாம‌ணியின் த‌ற்கொலையால் கோப‌ப்ப‌டும் விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யாராயை கட‌த்திச்செல்கிறார். 14 நாட்க‌ள் காட்டுக்குள் சிறைப்ப‌ட்டு கிட‌க்கிறார் ஐஸ்.

ஆர‌ம்ப‌த்தில் ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணும் ஐஸ்வ‌ர்யாராய் விக்ர‌மின் பிளாஷ்பேக் தெரிந்து அமைதி ஆகிறார். ஐஸின் அழ‌கில் மெல்ல‌ ம‌னதை ப‌றிகொடுக்கிறார் விக்ர‌ம். இத‌ற்கிடையில் விக்ர‌மை தேடி த‌ன் ப‌டையுட‌ன் காட்டில் அலைகிறார் பிருத்விராஜ் பார‌ஸ்ட் கைட் கார்த்திக் உத‌வியுட‌ன் .

ஆனால் ப்ரியாம‌ணியை நாச‌ம் செய்த‌ போலிஸ்கார‌ர்க‌ளை ஒவ்வொருவ‌ராக‌ கொடுர‌மாக‌ கொலை செய்கிறார் விக்ர‌ம். பிருத்விராஜ் ம‌ட்டுமே பாக்கி. க‌டைசியில் இருவ‌ரும் நேருக்குநேர் மோதுகிறார்க‌ள். ஐஸ்வ‌ர்யாராய் த‌ன் கண‌வ‌ணை விட்டுவிடும்ப‌டி கெஞ்சுகிறார்.


த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ 'காட்டுசிறுக்கிக்காக‌' இருவ‌ரையும் விட்டுவிடுகிறார் விக்ர‌ம். இதோடு ப‌ட‌ம் முடிந்திருந்தால் ஒரு சராச‌ரி பட‌மாக‌ இருந்திருக்கும். ஆனால் அத‌ற்கு பிற‌கு(தான்) நிமிர்ந்து உட்காரவைக்கிறார் ம‌ணிர‌த்ன‌ம். க‌டைசி 15 நிமிட‌ங்க‌ள் பட‌த்தின் முந்தைய‌ தொய்வுக‌ளை போக்கிவிடுகிற‌து. ஆர‌ம்ப‌ம் முத‌ல் ஆர்ப்பாட்ட‌மாகவே ந‌க‌ரும் ப‌ட‌த்தின் க‌டைசி நேர‌ காட்சிகள் அமைதியான‌து.

விக்ர‌ம் ,ஐஸ்வ‌ர்யாராய், பிருத்விராஜ் போட்டி போட்டு ந‌டித்திருக்கிறார்கள். பிருத்விராஜ் க‌ம்பீர‌மாக‌ வ‌ல‌ம் வ‌ருகிறார். அவ‌ர் முக‌த்தில் தெரியும் ஒரு சீரிய‌ஸ்னெஸ்ஸை ப‌ட‌ம் முழுக்க‌ மெயின்டென் ப‌ண்ணுகிறார். நிச்ச‌யமாக‌ அவ‌ருக்கு இந்த‌ ப‌ட‌ம் ஒரு மைல்க‌ல். ஐஸ்வ‌ர்யாராய் வ‌ரும் காட்சிகளில் அந்த‌ பிரேம் முழுக்க‌ அவரே ஆக்ர‌மித்திருக்கிறார். பின்னால் தெரியும் ர‌ம்யமான‌ காட்சிக‌ள் கூட‌ ராயின் அழ‌கில் காணாம‌ல்போய்விடுகின்றன.

விக்ர‌ம் ந‌டிப்பில் பிர‌மாத‌ப்ப‌டுத்திருந்தாலும் இய‌க்குன‌ர் பாலா அளவிற்கு இவ‌ரை யாரும் உப‌யோக‌ப்ப‌டுத்த‌வில்லை என்றே தோன்றுகிற‌து. மற்ற‌ப‌டி த‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலையை சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார் விக்ர‌ம் . ஐஸிட‌ம் வழியும் காட்சிக‌ளில் அவ‌ர‌து கேர‌க்டர் கொஞ்ச‌ம் சறுக்கவே செய்கிற‌து.

பட‌த்தின் முத‌ல்பாதியில் பெரிதாக‌ க‌தை என்று எதையும் காணோம். விக்ர‌மின் க‌ட‌த்த‌ல்,பிருத்வியின் தேடுத‌ல்,ஐஸின் த‌விப்பு இவை ம‌ட்டுமே முன்பாதியில். பின்பாதியில் வ‌ரும் பிளாஷ்பேக்கை இன்னும் அழுத்த‌மாக‌ சொல்லியிருக்க‌லாம். இத‌ற்கு முந்தைய‌ ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ங்க‌ளைப்போல‌ இசைக்கு முக்கிய‌த்துவ‌ம் இல்லை இப்ப‌ட‌த்தில். பிண்ணனி இசையில் பின்னியெடுத்திருக்கிறார் ஆஸ்கார் நாய‌க‌ன். பாட‌ல்க‌ள் கேட்க‌ கேட்க‌ பிடிக்க‌லாம். இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ குறைக‌ள் இருந்தாலும் பட‌த்தின் பிர‌ம்மாண்ட‌ம் விய‌க்க‌வைக்கிற‌து. பெரும்பாலான‌ காட்சிக‌ள் இய‌ற்கை எழில் கொஞ்சும் காட்டுப்ப‌குதி அருவிக‌ள் என‌ அச‌த்த‌லான இட‌ங்க‌ளில் படமாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. அந்த‌ ம‌லை பால‌த்தில் ந‌ட‌க்கும் ச‌ண்டைக்காட்சி ஆங்கில‌ ப‌டங்க‌ளுக்கு நிக‌ரான‌து.

ம‌ணிர‌த்ன‌ம் பட‌த்திற்கேன ஒரு த‌னி ர‌சிக‌ர் ப‌ட்டாள‌ம் உண்டு. வித்யாச‌மான‌ ஒளிப்ப‌திவு, சுருக்க‌மான‌ வ‌ச‌ன‌ம் ம‌ற்றும் காட்சிக‌ள் என‌ இவ‌ர‌து ஸ்டைல் த‌னி. ஒரு ஊரில் ஒரு ராஜா என்றெல்லாம் பாமரனுக்கும் புரிகிற‌ மாதிரி ஆர‌ம்பித்து க‌தை சொல்ல‌ இவ‌ருக்கு தெரியாது. மொத்த‌த்தில் ம‌ணிர‌த்ன‌ம் இந்த‌ முறை த‌ன் ர‌சிக‌ர்க‌ளை(ம‌ட்டும்) ஏமாற்ற‌வில்லை என்றே தோன்றுகிற‌து.

Sunday, June 6, 2010

செய்திக‌ள் 2030

இது ஏதோ ஒரு செய்தி சேன‌லின்(அல்ல‌து Web சேன‌ல்) 2030ம் ஆண்டு செய்திகள்



  • சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் ப‌ழ‌ம் பெரும் கட்டிட‌மான LIC நாளை குண்டு வைத்து த‌க‌ர்க்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ த‌க‌வ‌லை சென்னை மேய‌ர் நேற்று அறிவித்தார். த‌ற்போது சென்னையில் இருக்கும் மிக‌ச்சிறிய‌ க‌ட்டிட‌ம் LIC என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

  
  • எந்திர‌ன் என்ற‌ த‌மிழ்ப்ப‌ட‌ம் முற்றிலுமாக‌ எடுக்க‌ப்பட்டுவிட்ட‌தாக‌வும் விரைவில் ரிலீஸ் ஆகும் என‌ டைர‌க்ட‌ர் ஷ‌ங்க‌ர் ப‌த்திரிக்கையாளர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

  
  • ந‌டிக‌ர் 'பைல‌ட்' பிர‌பாக‌ர‌ன் 2031 ல் ஆட்சியை பிடிப்போம் என‌ த‌ன‌து Blogல் தெரிவித்துள்ளார். இவ‌ர‌து த‌ந்தை 'கேப்ட‌ன்' விஜ‌யகாந்தின் தே.தி.மு.க‌ க‌ட்சியின் துணைத்த‌லைவ‌ராக பிர‌பாக‌ர‌ன் இன்று பொறுப்பேற்றார்.

  
  • 2040 ல் இந்தியா வ‌ல்ல‌ர‌சாகும் என‌ குடிய‌ர‌சு த‌லைவ‌ர் அப்துல் வ‌ஹாப் ந‌ம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இது ப‌ற்றி இவ‌ர் கூறியிருப்ப‌தாவ‌து சிற‌ந்த சிந்தனை உள்ள‌ ரோபோக்க‌ள்(Robots) நம் நாட்டில் அதிக‌ம் உள்ள‌தாக‌வும் இவ‌ர்க‌ள் இந்தியாவின் வ‌ருங்கால‌ தூண்கள் என‌வும் தெரிவித்துள்ளார்.
  
  • ஸ்விஸ் வ‌ங்கியிலிருந்து இந்திய‌ர்க‌ளின் க‌றுப்பு பண‌ம் விரைவில் இந்தியாவிற்க்கு கொண்டுவ‌ர‌ப்ப‌டும் என்று உள்துறை அமைச்ச‌ர் தெரிவித்தார்.

  
  • நேற்று ந‌ட‌ந்த உல‌க்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்ட‌ம் ஒன்றில் இந்தியா அண்டார்டிகா அணியிட‌ம் தோல்வி அடைந்த‌து. மொத்த‌ம் 11 பேரே வ‌சிக்கும் அண்டார்டிகாவில் 11 பேரும் கிரிக்கெட் விளையாடுப‌வ‌ர்க‌ள் என‌பது குறிப்பிட‌த்த‌க்க‌து. இது ப‌ற்றி இந்திய‌ கேப்ட‌ன் MS ஆணி 'ம‌திய‌ உண‌வில் இந்திய‌ வீர‌ர்க‌ள் உருளைக்கிழ‌ங்கு சாப்பிட்ட‌தே அணியின் தோல்விக்கு கார‌ண‌ம்' என‌ தெரிவித்தார்.

  
  • சுவாமி சொத்யான‌ந்தா காவ‌ல் நிலைய‌த்தில் புகார். இது குறித்து கூற‌ப்ப‌டுவதாவ‌து ந‌டிகை அஞ்சிதா சுவாமியின் ஆசைக்கு இண‌ங்க‌ மறுத்த‌தால் அதிர்ச்சியான‌ சுவாமிகள் காவ‌ல் நிலைய‌த்தில் புகார் அளித்துள்ளார். இது ப‌ற்றி சொத்யான‌ந்தா தெரிவிக்கையில் 'இது சாமியார்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌டும் மிக‌ப்பெரிய‌ அநீதி' என்றார்.

  
  • சென்ற‌ வாரம் ரீலிஸான புறா ப‌ட‌ம் உலகெங்கும் வெற்றி நடைப்போடுவ‌தாக‌ அப்ப‌ட‌ நாய‌க‌ன் 'முதிர்' த‌ள‌ப‌தி விஜ‌ய் தெரிவித்துள்ளார். இது இவ‌ர‌து 200வது ப‌ட‌ம். த‌மிழில் 200 ப‌ட‌ங்க‌ளில் க‌தாநாய‌க‌னாக நடித்து சாத‌னை புரிந்துள்ளார். மேலும் ஒரே க‌தையை வைத்து 150 ப‌ட‌ங்கள் நடித்து உல‌க சாத‌னை ப‌டைத்த‌ற்காக‌ சமீப‌த்தில் தமிழ‌க‌ அர‌சின் உய‌ரிய‌ விருதை பெற்ற‌வ‌ர் இவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

  
  • தமிழ‌க முத‌ல்வ‌ர் க‌லைஞர் க‌ருணாநிதி த‌ன‌து 108வ‌து பிற‌ந்த நாளை இன்று கொண்டாடினார். த‌ன‌து கொள்ளுப்பேர‌னை துணை முத‌ல்வ‌ராக அறிவித்தார். இத‌னால் த‌ன‌து வேலைப் ப‌ளு குறையும் என‌ தெரிவித்த‌ முத‌ல்வ‌ர் தான் விரைவில் அர‌சிய‌லில் இருந்து ஓய்வு பெற‌வுள்ள‌தாக‌வும் தெரிவித்துள்ளார்.

Sunday, May 30, 2010

அழ‌கிய‌ பெண்ணின் ஆணவ‌ம்


ஏதும‌றியா குழந்தையைப்போல‌த்தான்
நீயும் நானும்.
நம் காத‌ல் மட்டும்
அழ‌கிய‌ பெண்ணின்
ஆணவ‌ம் போல


_______________________________________________


உன‌க்கு பிடித்தது எல்லாம்
என‌க்கு பிடிக்கிற‌து.
உன்ன‌கு பிடிக்காத‌து எதுவும்
என‌க்கு பிடிக்க‌வில்லை.
என்னையும் சேர்த்து.


_______________________________________________


உன்னை காத‌லித்த‌ நேர‌த்தை விட‌
உனக்காக‌ காத்திருந்த
நேரம்தான் அதிக‌ம்.


_______________________________________________


பெரும்பாலும்
நான் உற‌ங்குவ‌தில்லை.
உன் நினைவு
க‌லைந்துவிடுமோ
என்ற க‌வ‌லையில்.


_______________________________________________




தேடிப்ப‌ல‌னில்லை
உன்னிட‌ம் தொலைந்துபோன‌
என் இத‌ய‌த்தை.

Sunday, March 14, 2010

பார்வையில் ஆயிர‌ம் அர்த்த‌ங்க‌ள்

உன் ஒரு பார்வையில்
ஆயிர‌ம் அர்த்த‌ங்க‌ள் உணர்ந்தேன்.
என் ஆயிர‌ம் பார்வைக‌ளில் ஒன்றைக் கூட‌
உன்னால் உண‌ர‌முடிய‌வில்லையே ஏன்?


ரோஜாவையெல்லாம் கூந்த‌லில்தான்
சூடிக்கொள்கிறாய்.
முட்க‌ளை மட்டும் ஏன‌டி ம‌ன‌தில்?


உன் மொழிகள் எழுதத்தான்
டைரி வாங்கினேன்.
உன் மெள‌ன‌ங்க‌ளைத்தான்
என்னால் எழுத‌முடிகிற‌து.



எத்த‌னை க‌டித‌ங்கள் எழுதியும்
என் காத‌லை நீ ஏற்க‌வில்லை.
ஒருவேளை ஏற்றிருக்கலாம்
ஒன்றையாவ‌து உன்னிட‌ம் கொடுத்திருந்தால்.



உன்னை முத‌ன்முத‌லாக‌ ச‌ந்தித்த‌து
என‌க்கு நினைவில்லை.
ஆனால் அப்போதும் என்னைப்
பார்க்காத‌வளாக‌த்தான் நீ இருந்திருப்பாய்.

Monday, March 8, 2010

ஓடுடா ஓடு....

1996ம் வ‌ருட‌ம். திருச்சியில் ஜ‌மால் முக‌மது கல்லூரியில் பிஎஸ்ஸி க‌ணித‌ம் ப‌டித்துக் கொண்டிருந்தேன். ஹாஸ்ட‌லில் த‌ங்கியிருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் அர‌ட்டை அடிப்ப‌து எனறால் ஒரு ஜாலிதான். அதிலும் சில பேர் த‌மிழ் பேசும் ஸ்டைல் இருக்கே? ம‌துரை த‌மிழ்,கோவை த‌மிழ்,திருனெல்வேலி த‌மிழ்,கீழ‌க்க‌ரை த‌மிழ் இப்படி சொல்லிக்கொண்டெ போகலாம்.

சில ந‌ண்ப‌ர்க‌ள் க‌ல‌க‌லப்பாக‌ பேசுவார்கள். சில பேர் பேச‌ ஆர‌ம்பித்தாலே எழுந்து ஓடிவிட‌லாம் என‌ தோன்றும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நண்பரைப் ப‌ற்றி இங்கே..

அவ‌ர் பெய‌ர் ரியாஜ். mca ப‌டித்துக்கொண்டிருந்தார். ரியாஜ் பாய் என்று நாங்க‌ள் கூப்பிடுவோம். கொஞ்ச‌ம் க‌ருப்பு நிற‌மாக‌த்தான் இருப்பார். ஆனால் த‌ன்னை மாநிறம் என்றுதான் சொல்லுவார். ஒரு முறை நான் 'ஆமாம்! 'மா' நிற‌ம்தான். அதாவ‌து 'மா' என்றால் 'மாமர‌ம்'. ரியாஜ் பாய் மாமர‌த்து நிற‌ம்' என்றேன். பல‌மாக‌ சிரித்துக்கொண்டார்.


அடிக்க‌டி ரூமுக்கு வ‌ந்து பிளேடு போடுவார். ஒரு விடுமுறை நாள். அறையை சுத்த‌ம் செய்துக்கொண்டிருந்தோம். ஜன்னல் வழியே 'ப‌ராக்கு' பார்த்துக்கொண்டிருந்த‌ ரூம்மேட் திடிரென ப‌த‌ற்ற‌மாய் க‌த்தினான். 'அய்யோ ரியாஜ் பாய் வ‌ராரு'. எல்லோரும் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டோம். எங்க‌ளுக்கும் ப‌த‌ற்ற‌ம் தொற்றிக்கொண்ட‌து. 'ஓடுடா ஒடு' ஒருவ‌ன் க‌த்திககொண்டே வெளியில் ஓடினான். க‌த‌வை தாழ்ப்பாள் போட்டுவிட்டு பாத்ரூமை நோக்கி ஒடினோம். உள்ளே சென்று ஒளிந்துகொண்டோம். லேசாக கத‌வை திறந்து வைத்து நோட்ட‌மிட்டோம்.

ரியாஜ் பாய் வ‌ந்து ரூம் க‌த‌வை உற்றுப் பார்த்தார். முக‌த்தில் ஏமாற்ற‌ம். சற்று நேர‌ம் நின்று விட்டு கிள‌ம்பிவிட்டார். ஒரு மிக‌ப்பெரிய‌ ஆப‌த்தில் இருந்து தப்பித்த‌ ச‌ந்தோஷ‌ம் எங்க‌ளுக்கு அன்று. தொட‌ர்ந்து இந்த‌ முறையை பின்ப‌ற்ற‌ தொட‌ங்கினோம். ச‌ம‌ய‌ங்க‌ளில் அல‌ட்சியமாக‌ இருந்து அல்ல‌ல்ப‌ட்ட‌துண்டு.

ஒரு இர‌வு நேர‌த்தில் க‌ஷ்ட‌கால‌த்தின்போது நீண்ட‌ நேர‌ம் போட்டு தாக்கிகொண்டிருந்தார் ரியாஜ் பாய். ஆளாளுக்கு முன‌க‌ ஆர‌ம்பிதோம். அவ‌ர் கண்டுகொள்ள‌வேயில்லை. முக‌த்தை அஷ்ட‌கோண‌லாக்கி நாக்கை க‌டித்து ப‌ல்லை அற‌க்கி ஜாடை மாடையாக‌ சொல்லிப்பார்த்தோம். ம‌னிதர் புரிந்துகொள்ளவேயில்லை. திடிரென‌ க‌ரண்ட் க‌ட் ஆன‌து. யார் எங்கிருக்கிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை அவ்வ‌ளவு இருட்டு. அவ்வ‌ள‌வுதான் இருந்த ஆத்திர‌த்தில் அவ‌ர் முதுகில் ச‌ப்பென்று ஒரு அறை அறைந்தேன். நண்ப‌ர்க‌ள் புரிந்துகொண்டார்க‌ள். தொட‌ர்ந்து ட‌ம் ட‌ம் என‌ ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்கிய‌து. அவ‌ரால் க‌த்தகூட‌ முடிய‌வில்லை.

ஒரு இர‌ண்டு நிமிட‌த்திற்க்கு தொட‌ர்ந்து அடை ம‌ழை நீடித்த‌து. பிற‌கு அவ‌ர‌வ‌ர் இட‌த்தில் போய் அம‌ர்ந்தோம். 5 நிமிட‌த்தில் க‌ர‌ண்ட் வ‌ந்துவிட்ட‌து. ஒரு ம‌யான‌ அமைதி. ரியாஜ் பாயை உற்று பார்த்தேன். முக‌த்தில் ஈ ஆட‌வில்லை. ச‌டாரென சுதாதிரித்துக்கொண்டு 'டேய் யாருடா என் முதுகில் அடித்த‌து' என்றேன் முதுகைத்தட‌விக்கொண்டே. உட‌னே பச‌ங்க‌ளும் விவ‌ர‌மாய் த‌ங்கள் முதுகைத்த‌ட‌விக்கொண்டே 'யாருடா என்னை அடித்த‌து' என‌ க‌த்த‌ ஆர‌ம்பித்தார்கள்.

ரியாஜ் பாய் அமைதியாய் சொன்னார் 'என்னையும் யாரோ அடிச்சாங்க‌ப்பா. உங்க‌ அள‌வுக்கு இல்லை. இருந்தாலும் லேசா ஒரு அடிதான் விழுந்தது'. என‌ சமாளித்தார். அவர் போன‌ பிற‌கு நீண்ட‌ நேர‌ம் சிரித்துக்கொண்டேயிருந்தோம்.

Wednesday, February 17, 2010

பிரிய‌மான தோழிக்கு ஒரு க‌டித‌ம்

பிரிய‌மான தோழிக்கு

உன‌க்கு பிரிய‌மான‌ அல்ல‌து பிரிய‌மில்லாத ஒரு சினேகித‌னின் ம‌ட‌ல். இது என் காத‌லை சொல்லும் ம‌ட‌ல‌ல்ல. என் ம‌ன‌தின் அடிவார‌த்தில் ஆர்ப்ப‌ரிக்கும் உன் நினைவ‌லைக‌ள் ஒன்றிர‌ண்டு இங்கு சித‌றுகிற‌து அவ்வ‌ள‌வுதான். இந்த‌ உயிர்த் தூற‌ல் உன் இதய‌த்தை கொஞ்ச‌மேனும் ஈர‌ப்ப‌டுத்த‌வேண்டும் என்பதுதான் என் ஆசை.

உன்னை நான் ச‌ந்தித்த‌து ஒரு மாலை நேர‌ க‌ட‌ற்கரையில்தான். அமைதியை தேடிவ‌ந்து க‌டலின் அமைதியின்மையை ர‌சிக்கும் முர‌ண்பாடான மனித‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் தினமும் உன்னை ம‌ட்டுமே ர‌சித்துக்கொண்டிருக்கிறேன். நான் உனக்கு பின்னால் உட்கார்ந்து உன்னை ர‌சிக்க‌ உன‌க்கு எதிரில் உட்கார்ந்து க‌ட‌ல் உன்னை ர‌சிக்கிற‌தோ என‌ தோன்றும். ச‌ம‌ய‌ங்க‌ளில் இந்த‌ ச‌முத்திர‌ம் மீது கோப‌ம் வ‌ரும். ஆனால் ஆயிரம் மனித‌ர்க‌ள் கூடியிருந்தாலும் அத்த‌னை பேரையும் த‌னிமைப‌டுத்தும் இந்த‌ க‌ட‌ற்க‌ரையை நினைத்து நான் விய‌ந்ததுண்டு.

நீயும் என்னை போல‌ த‌னிமையைத் தேடித்தான் வ‌ந்திருக்க‌வேண்டும். பல‌ நாட்க‌ள் உன் பார்வை என் ப‌க்க‌ம் திரும்ப‌வேயில்லை. நீ என்னை பார்ப்ப‌த‌ற்க்கே நான் தவ‌ம் இருக்க‌வேண்டிய‌தாயிற்று. ஒரு நாள் அது ந‌ட‌ந்த‌து. முத‌ல்முத‌லாக‌ என்னை பார்த்தாய். அப்போது என்னுள் உடைந்த‌ ஒன்றிர‌ண்டு செல்க‌ள் இன்று வ‌ரை ஒட்டிக்கொள்ள‌வேயில்லை. உன‌ ம‌ஞ்ச‌ள் முக‌த்தில் ப‌ட்டு என‌க்குள் தெறித்த‌ன‌ சூரிய‌க்க‌திர்க‌ள். மொத்த‌மாய் ர‌த்த‌ங்க‌ள் காய்ந்துபோய்தான் அன்று வீடு திரும்பினேன்.

தின‌ம் தின‌ம் நான் உன்னை ச‌ந்திப்ப‌து இங்குதான். என்னைப் போல‌வே அலைக‌ளும் ஆர்வமாய் வ‌ந்துவிடுவ‌துதான் ஆச்ச‌ர்ய‌ம். உன் க‌வ‌ன‌த்தை திசை திருப்ப‌ நான் சில‌ முய‌ற்சிக‌ள் செய்த‌துண்டு. ஆனால் எத‌ன் மீதும் சில வினாடிக‌ள் கூட‌ நிலைக்காத‌ உன் விழிக‌ளை என்ன‌வென்று சொல்வ‌து நான். பேசாம‌ல் உன‌க்கு எதிரில் க‌ட‌லில் மூழ்கிவிடலாமா என‌த் தோன்றும். ஆனால் முழுதாய் நீ க‌ரையில் அம‌ர்ந்திருக்க‌ எந்த‌ முத்தை தேடி நான் க‌ட‌லில் குதிப்ப‌து?

நீ கீறிச்சென்ற‌ ம‌ண்துக‌ள்க‌ளை நானும் போய் கீறிப்பார்த்திருக்கிறேன். உன்னைத் தொட்ட‌ காற்ற‌லைக‌ளை ஓடிப்போய் த‌ழுவியிருக்கிறேன். உன் கால்க‌ளை தொட்டு த‌ன்னை க‌ழுவிக்கொண்ட‌ கட‌ல் அலைகளை கைக‌ளில் அள்ளியிருக்கிறேன். வெறும் உதிர‌ங்க‌ளை சும‌ ந்து கொண்டிருக்கும் என் இத‌ய‌த்தில் உன்னையும் சும‌க்க‌ விரும்புகிறேன். மல‌ர்களை நேசிப்ப‌வ‌ன் உன்னையும் நேசிக்க‌ விரும்புகிறேன்.

உன் நாண‌த்தில் ஒரு துளியேனும் சிக‌ப்பு அதிக‌ரித்திருந்தால் என்னையும் என் க‌டித‌த்தையும் விரும்புகிறாய் என‌ அர்த்த‌ம். ச‌ம்ம‌த‌ம் என்றால் சொல்லிவிடு. ம‌றுப்பை ம‌ட்டும் ம‌ன‌திலேயே வைத்துக்கொள். நாளை மீண்டும் இந்த‌ க‌ட‌ற்க‌ரைக்கு வ‌ருவேன். என் ம‌ன‌தைப் போல் கொந்த‌ளிக்கும் இந்த‌ க‌ட‌ல் அலைக‌ளை ம‌ட்டும் ர‌சித்துவிட்டு சென்றுவிடுவேன்.

Sunday, February 14, 2010

காத‌ல‌ர் தின‌ம்

காத‌லர் தின‌ ப‌ரிசு
இந்த‌ தின‌த்தில்
என்னை நினைவுப‌டுத்தும்
ஒரு பொருளை உன‌க்கு ப‌ரிச‌ளிக்க‌ ஆசை.
ஆனால் என்னையே த‌ந்தாலும்
அது சாத்திய‌மில்லை.


காத‌ல‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்
வாழ்த்துக்க‌ளையெல்லாம் என்னுட‌ந்தான்
ப‌ரிமாறிக்கொண்டாள்.
வாழ்க்கையை ம‌ட்டும்
வேறொருவ‌னுட‌ன்.


காத‌ல‌ர் தின‌க் கொண்டாட்ட‌ம்
இன்று காதல‌ர் தின‌ம்
குதுகல‌மாய் ஆர‌ம்பித்தது ஒரு க‌ஃபே ஷாப்பில்.
சென்ற வ‌ருட‌ம் வேறு இருவ‌ராய்
இருந்த‌ நாம், இன்று ஒருவ‌ரானோம்.
ஒரே மேஜையில் அம‌ர்ந்தோம்.
கொண்டு வ‌ந்த‌ப் பூக்க‌ள்
இட‌ம் மாறி அம‌ர்ந்தன‌.
பொய்யாய் புண்ணகைத்து
ப‌றிமாறிக்கொண்டோம்,
நிறைய‌ முத்தங்க‌ளும்
கொஞ்ச‌ம் எச்சில்க‌ளும்.
இச்சைக‌ள் தீர்ந்த‌ன‌.
கொண்டாட்ட‌ங்க‌ள் முடிந்தன‌.
மீண்டும் அடுத்த‌ வ‌ருட‌ம்
இதே இட‌த்தில்
இதே தினத்தில் ச‌ந்திப்போம்
வேறு இருவ‌ராய்.

Monday, January 4, 2010

எங்கிருக்கிறாய் நீ தோழி?


1994 ம் வருடம். திருச்சி கல்லூரி ஒன்றில் பி எஸ் சி படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறையில் நானும் என் நண்பனும் ஊருக்கு செல்வதற்காக திருச்சியிலிருந்து பேருந்து மூலம் தஞ்சாவூர் வந்து அங்கிருந்து passenger train ல் ஊருக்கு போகலாம் என plan

தஞ்சாவூர் வந்து இறங்கி அங்கு காலியாக நின்றிருந்த trainல் ஜன்னல் இருக்கையில் உடைமைகளை வைத்துவிட்டு இறங்கி கொஞ்சம் தூரம் நடந்தோம். train புறப்படும் நேரத்தில் ஓடிச்சென்று தொற்றிக்கொண்டோம் . இருக்கைக்கு போன எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எங்கள் மூட்டை முடிச்சுகளை ஓரம் தள்ளிவிட்டு ஜன்னல் இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்தீர்க‌ள் நீ மற்றும் இரண்டு பேர். ஒரு சினேக‌மான புன்ன‌கையை வீசி எங்க‌ளை சமாதான‌ப்படுத்தினாய்.

நாங்க‌ள் பெரிதாக அல‌ட்டிக்கொள்ளாம‌ல் ப‌டியோர‌ம் வ‌ந்து நின்று கொண்டோம். மாலை நேர‌ தென்ற‌ல் காற்று ம‌ன‌தை த‌ழுவிச்சென்ற‌து. எங்க‌ள‌து பேச்சில் உன‌க்கு அவ்வ‌ள‌வாக‌ விருப்ப‌ம் இல்லையென்றாலும் எங்க‌ளை அவ்வ‌ப்போது ஓர‌க்க‌ண்ணால் பார்த்துக்கொண்டாய். எங‌க‌ள் மீது உன‌க்கு ஏனோ ஆர்வ‌ம் வ‌ர‌த்தொட‌ங்கிய‌து. ஒருவேளை உன்னைப் போல‌ ஒரு அழகான‌ப் பெண்ணை புற‌க்க‌ணித்துவிட்டு நாங்க‌ள் பேசிக்கொண்டிருந்ததால் இருக்க‌லாம். அவ்வ‌ப்போது எழுந்து எங்கள் அருகில் வ‌ருவ‌தும் போவ‌துமாக‌ இருந்தாய்.

வானம் நிற‌மிழக்க‌ தொட‌ங்கிய‌தும் நாங்க‌ள் உள்ளே வந்து அம‌ர்ந்தோம். வார்த்தைக‌ளை எண்ணி பேச‌த்தொட‌ங்கினோம். கும்ப‌கோண‌ம் ஜங்ச‌ன் தாண்டிய‌பிற‌கு வார்த்தைகள் வேக‌ம் பிடித்த‌து. நீ வ‌ல்ல‌ம் பொறியிய‌ல் க‌ல்லூரியில் ப‌டிப்ப‌தாக‌ சொன்னாய். உட‌ன் வ‌ந்திருப்ப‌து உன் தோழி ம‌ற்றும் தோழியின் தாயார் என‌ தெரிந்த‌து.

உன் தோழியும் இதில் க‌ல‌ந்துகொள்ள‌ க‌ல‌க‌லப்பாக‌ நேர‌ம் நக‌ர்ந்த‌து. உன் பெரிய‌ விழிக‌ளை மேலும் பெரிதாக்கி நீ பேசிய‌து அழகாய் இருந்த‌து. எல்லை மீறாத‌ நம் உரையாட‌லை உன் தோழியின் தாயார் ர‌சித்துக்கொண்டிருந்தார். அவ்வ‌ப்போது கார‌ண‌மில்லாமல் ஒரு அமைதி தோன்றி ம‌றைந்த‌து.

நேர‌ம் போன‌தே தெரிய‌வில்லை என்று சொல்ல‌முடியாது. நேர‌ம் போன‌து தெரிந்த‌து. அத‌னால்தான் நாட்க‌ள் ப‌ழ‌கிய‌ அனுபவ‌ம் அன்று கிடைத்த‌து. கடைசி வ‌ரை உன் பெய‌ரை கேட்க‌ ம‌ற‌ந்துபோனேன். சித‌ம்ப‌ர‌ம் வ‌ந்த‌போது நாங்க‌ள் தீடிரென‌ விடைபெற்ற‌து உனக்கு அதிர்ச்சியாக‌ இருந்திருக்க‌லாம். ஆனால் கொள்ளிட‌த்தில் இற‌ங்க‌வேண்டிய‌வ‌ன் உனக்காக‌த்தான் சித‌ம்ப‌ர‌ம் வ‌ரை வ‌ந்தேன் என்ப‌து உன‌க்கு தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை.