விக்ரம் ஒடுக்கப்பட்ட தன் மக்களுக்காக போராடுகிறார். சில போலிஸ்காரர்களைப் போட்டுத்தள்ளுகிறார். காட்டுக்குள் ஒரு அரசாங்கம் நடத்துகிறார்கள் விக்ரமும் அவரது அண்ணன் பிரபுவும். அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் எஸ்.பி பிருத்விராஜ் தன் அழகான மனைவி ஐஸ்வர்யாராயுடன்.
விக்ரம் தங்கை பிரியாமணி திருமணத்தில் தடாலடியாக உள்ளே நுழைந்து விக்ரமை சுட்டுவிட்டு பிரியாமணியை தூக்கிச்செல்கிறார் பிருத்விராஜ். விக்ரம் தப்பிவிடுகிறார். ப்ரியாமணியை போலிஸ் ஸ்டேசனில் வைத்து சின்னாபின்னமாக்கின்றனர் சில காவல்துறை அதிகாரிகள். பிரியாமணியின் தற்கொலையால் கோபப்படும் விக்ரம் ஐஸ்வர்யாராயை கடத்திச்செல்கிறார். 14 நாட்கள் காட்டுக்குள் சிறைப்பட்டு கிடக்கிறார் ஐஸ்.
ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் பண்ணும் ஐஸ்வர்யாராய் விக்ரமின் பிளாஷ்பேக் தெரிந்து அமைதி ஆகிறார். ஐஸின் அழகில் மெல்ல மனதை பறிகொடுக்கிறார் விக்ரம். இதற்கிடையில் விக்ரமை தேடி தன் படையுடன் காட்டில் அலைகிறார் பிருத்விராஜ் பாரஸ்ட் கைட் கார்த்திக் உதவியுடன் .
ஆனால் ப்ரியாமணியை நாசம் செய்த போலிஸ்காரர்களை ஒவ்வொருவராக கொடுரமாக கொலை செய்கிறார் விக்ரம். பிருத்விராஜ் மட்டுமே பாக்கி. கடைசியில் இருவரும் நேருக்குநேர் மோதுகிறார்கள். ஐஸ்வர்யாராய் தன் கணவணை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார்.
தன் மனம் கவர்ந்த 'காட்டுசிறுக்கிக்காக' இருவரையும் விட்டுவிடுகிறார் விக்ரம். இதோடு படம் முடிந்திருந்தால் ஒரு சராசரி படமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு பிறகு(தான்) நிமிர்ந்து உட்காரவைக்கிறார் மணிரத்னம். கடைசி 15 நிமிடங்கள் படத்தின் முந்தைய தொய்வுகளை போக்கிவிடுகிறது. ஆரம்பம் முதல் ஆர்ப்பாட்டமாகவே நகரும் படத்தின் கடைசி நேர காட்சிகள் அமைதியானது.
விக்ரம் ,ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். பிருத்விராஜ் கம்பீரமாக வலம் வருகிறார். அவர் முகத்தில் தெரியும் ஒரு சீரியஸ்னெஸ்ஸை படம் முழுக்க மெயின்டென் பண்ணுகிறார். நிச்சயமாக அவருக்கு இந்த படம் ஒரு மைல்கல். ஐஸ்வர்யாராய் வரும் காட்சிகளில் அந்த பிரேம் முழுக்க அவரே ஆக்ரமித்திருக்கிறார். பின்னால் தெரியும் ரம்யமான காட்சிகள் கூட ராயின் அழகில் காணாமல்போய்விடுகின்றன.
விக்ரம் நடிப்பில் பிரமாதப்படுத்திருந்தாலும் இயக்குனர் பாலா அளவிற்கு இவரை யாரும் உபயோகப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. மற்றபடி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் விக்ரம் . ஐஸிடம் வழியும் காட்சிகளில் அவரது கேரக்டர் கொஞ்சம் சறுக்கவே செய்கிறது.
படத்தின் முதல்பாதியில் பெரிதாக கதை என்று எதையும் காணோம். விக்ரமின் கடத்தல்,பிருத்வியின் தேடுதல்,ஐஸின் தவிப்பு இவை மட்டுமே முன்பாதியில். பின்பாதியில் வரும் பிளாஷ்பேக்கை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இதற்கு முந்தைய மணிரத்னம் படங்களைப்போல இசைக்கு முக்கியத்துவம் இல்லை இப்படத்தில். பிண்ணனி இசையில் பின்னியெடுத்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன். பாடல்கள் கேட்க கேட்க பிடிக்கலாம். இப்படி சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் படத்தின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுப்பகுதி அருவிகள் என அசத்தலான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அந்த மலை பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி ஆங்கில படங்களுக்கு நிகரானது.
மணிரத்னம் படத்திற்கேன ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வித்யாசமான ஒளிப்பதிவு, சுருக்கமான வசனம் மற்றும் காட்சிகள் என இவரது ஸ்டைல் தனி. ஒரு ஊரில் ஒரு ராஜா என்றெல்லாம் பாமரனுக்கும் புரிகிற மாதிரி ஆரம்பித்து கதை சொல்ல இவருக்கு தெரியாது. மொத்தத்தில் மணிரத்னம் இந்த முறை தன் ரசிகர்களை(மட்டும்) ஏமாற்றவில்லை என்றே தோன்றுகிறது.
மிகவும் அருமை .பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDelete