Sunday, March 14, 2010

பார்வையில் ஆயிர‌ம் அர்த்த‌ங்க‌ள்

உன் ஒரு பார்வையில்
ஆயிர‌ம் அர்த்த‌ங்க‌ள் உணர்ந்தேன்.
என் ஆயிர‌ம் பார்வைக‌ளில் ஒன்றைக் கூட‌
உன்னால் உண‌ர‌முடிய‌வில்லையே ஏன்?


ரோஜாவையெல்லாம் கூந்த‌லில்தான்
சூடிக்கொள்கிறாய்.
முட்க‌ளை மட்டும் ஏன‌டி ம‌ன‌தில்?


உன் மொழிகள் எழுதத்தான்
டைரி வாங்கினேன்.
உன் மெள‌ன‌ங்க‌ளைத்தான்
என்னால் எழுத‌முடிகிற‌து.



எத்த‌னை க‌டித‌ங்கள் எழுதியும்
என் காத‌லை நீ ஏற்க‌வில்லை.
ஒருவேளை ஏற்றிருக்கலாம்
ஒன்றையாவ‌து உன்னிட‌ம் கொடுத்திருந்தால்.



உன்னை முத‌ன்முத‌லாக‌ ச‌ந்தித்த‌து
என‌க்கு நினைவில்லை.
ஆனால் அப்போதும் என்னைப்
பார்க்காத‌வளாக‌த்தான் நீ இருந்திருப்பாய்.

Monday, March 8, 2010

ஓடுடா ஓடு....

1996ம் வ‌ருட‌ம். திருச்சியில் ஜ‌மால் முக‌மது கல்லூரியில் பிஎஸ்ஸி க‌ணித‌ம் ப‌டித்துக் கொண்டிருந்தேன். ஹாஸ்ட‌லில் த‌ங்கியிருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் அர‌ட்டை அடிப்ப‌து எனறால் ஒரு ஜாலிதான். அதிலும் சில பேர் த‌மிழ் பேசும் ஸ்டைல் இருக்கே? ம‌துரை த‌மிழ்,கோவை த‌மிழ்,திருனெல்வேலி த‌மிழ்,கீழ‌க்க‌ரை த‌மிழ் இப்படி சொல்லிக்கொண்டெ போகலாம்.

சில ந‌ண்ப‌ர்க‌ள் க‌ல‌க‌லப்பாக‌ பேசுவார்கள். சில பேர் பேச‌ ஆர‌ம்பித்தாலே எழுந்து ஓடிவிட‌லாம் என‌ தோன்றும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நண்பரைப் ப‌ற்றி இங்கே..

அவ‌ர் பெய‌ர் ரியாஜ். mca ப‌டித்துக்கொண்டிருந்தார். ரியாஜ் பாய் என்று நாங்க‌ள் கூப்பிடுவோம். கொஞ்ச‌ம் க‌ருப்பு நிற‌மாக‌த்தான் இருப்பார். ஆனால் த‌ன்னை மாநிறம் என்றுதான் சொல்லுவார். ஒரு முறை நான் 'ஆமாம்! 'மா' நிற‌ம்தான். அதாவ‌து 'மா' என்றால் 'மாமர‌ம்'. ரியாஜ் பாய் மாமர‌த்து நிற‌ம்' என்றேன். பல‌மாக‌ சிரித்துக்கொண்டார்.


அடிக்க‌டி ரூமுக்கு வ‌ந்து பிளேடு போடுவார். ஒரு விடுமுறை நாள். அறையை சுத்த‌ம் செய்துக்கொண்டிருந்தோம். ஜன்னல் வழியே 'ப‌ராக்கு' பார்த்துக்கொண்டிருந்த‌ ரூம்மேட் திடிரென ப‌த‌ற்ற‌மாய் க‌த்தினான். 'அய்யோ ரியாஜ் பாய் வ‌ராரு'. எல்லோரும் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டோம். எங்க‌ளுக்கும் ப‌த‌ற்ற‌ம் தொற்றிக்கொண்ட‌து. 'ஓடுடா ஒடு' ஒருவ‌ன் க‌த்திககொண்டே வெளியில் ஓடினான். க‌த‌வை தாழ்ப்பாள் போட்டுவிட்டு பாத்ரூமை நோக்கி ஒடினோம். உள்ளே சென்று ஒளிந்துகொண்டோம். லேசாக கத‌வை திறந்து வைத்து நோட்ட‌மிட்டோம்.

ரியாஜ் பாய் வ‌ந்து ரூம் க‌த‌வை உற்றுப் பார்த்தார். முக‌த்தில் ஏமாற்ற‌ம். சற்று நேர‌ம் நின்று விட்டு கிள‌ம்பிவிட்டார். ஒரு மிக‌ப்பெரிய‌ ஆப‌த்தில் இருந்து தப்பித்த‌ ச‌ந்தோஷ‌ம் எங்க‌ளுக்கு அன்று. தொட‌ர்ந்து இந்த‌ முறையை பின்ப‌ற்ற‌ தொட‌ங்கினோம். ச‌ம‌ய‌ங்க‌ளில் அல‌ட்சியமாக‌ இருந்து அல்ல‌ல்ப‌ட்ட‌துண்டு.

ஒரு இர‌வு நேர‌த்தில் க‌ஷ்ட‌கால‌த்தின்போது நீண்ட‌ நேர‌ம் போட்டு தாக்கிகொண்டிருந்தார் ரியாஜ் பாய். ஆளாளுக்கு முன‌க‌ ஆர‌ம்பிதோம். அவ‌ர் கண்டுகொள்ள‌வேயில்லை. முக‌த்தை அஷ்ட‌கோண‌லாக்கி நாக்கை க‌டித்து ப‌ல்லை அற‌க்கி ஜாடை மாடையாக‌ சொல்லிப்பார்த்தோம். ம‌னிதர் புரிந்துகொள்ளவேயில்லை. திடிரென‌ க‌ரண்ட் க‌ட் ஆன‌து. யார் எங்கிருக்கிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை அவ்வ‌ளவு இருட்டு. அவ்வ‌ள‌வுதான் இருந்த ஆத்திர‌த்தில் அவ‌ர் முதுகில் ச‌ப்பென்று ஒரு அறை அறைந்தேன். நண்ப‌ர்க‌ள் புரிந்துகொண்டார்க‌ள். தொட‌ர்ந்து ட‌ம் ட‌ம் என‌ ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்கிய‌து. அவ‌ரால் க‌த்தகூட‌ முடிய‌வில்லை.

ஒரு இர‌ண்டு நிமிட‌த்திற்க்கு தொட‌ர்ந்து அடை ம‌ழை நீடித்த‌து. பிற‌கு அவ‌ர‌வ‌ர் இட‌த்தில் போய் அம‌ர்ந்தோம். 5 நிமிட‌த்தில் க‌ர‌ண்ட் வ‌ந்துவிட்ட‌து. ஒரு ம‌யான‌ அமைதி. ரியாஜ் பாயை உற்று பார்த்தேன். முக‌த்தில் ஈ ஆட‌வில்லை. ச‌டாரென சுதாதிரித்துக்கொண்டு 'டேய் யாருடா என் முதுகில் அடித்த‌து' என்றேன் முதுகைத்தட‌விக்கொண்டே. உட‌னே பச‌ங்க‌ளும் விவ‌ர‌மாய் த‌ங்கள் முதுகைத்த‌ட‌விக்கொண்டே 'யாருடா என்னை அடித்த‌து' என‌ க‌த்த‌ ஆர‌ம்பித்தார்கள்.

ரியாஜ் பாய் அமைதியாய் சொன்னார் 'என்னையும் யாரோ அடிச்சாங்க‌ப்பா. உங்க‌ அள‌வுக்கு இல்லை. இருந்தாலும் லேசா ஒரு அடிதான் விழுந்தது'. என‌ சமாளித்தார். அவர் போன‌ பிற‌கு நீண்ட‌ நேர‌ம் சிரித்துக்கொண்டேயிருந்தோம்.