உனக்கு பிரியமான அல்லது பிரியமில்லாத ஒரு சினேகிதனின் மடல். இது என் காதலை சொல்லும் மடலல்ல. என் மனதின் அடிவாரத்தில் ஆர்ப்பரிக்கும் உன் நினைவலைகள் ஒன்றிரண்டு இங்கு சிதறுகிறது அவ்வளவுதான். இந்த உயிர்த் தூறல் உன் இதயத்தை கொஞ்சமேனும் ஈரப்படுத்தவேண்டும் என்பதுதான் என் ஆசை.
உன்னை நான் சந்தித்தது ஒரு மாலை நேர கடற்கரையில்தான். அமைதியை தேடிவந்து கடலின் அமைதியின்மையை ரசிக்கும் முரண்பாடான மனிதர்களுக்கு மத்தியில் தினமும் உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருக்கிறேன். நான் உனக்கு பின்னால் உட்கார்ந்து உன்னை ரசிக்க உனக்கு எதிரில் உட்கார்ந்து கடல் உன்னை ரசிக்கிறதோ என தோன்றும். சமயங்களில் இந்த சமுத்திரம் மீது கோபம் வரும். ஆனால் ஆயிரம் மனிதர்கள் கூடியிருந்தாலும் அத்தனை பேரையும் தனிமைபடுத்தும் இந்த கடற்கரையை நினைத்து நான் வியந்ததுண்டு.
நீயும் என்னை போல தனிமையைத் தேடித்தான் வந்திருக்கவேண்டும். பல நாட்கள் உன் பார்வை என் பக்கம் திரும்பவேயில்லை. நீ என்னை பார்ப்பதற்க்கே நான் தவம் இருக்கவேண்டியதாயிற்று. ஒரு நாள் அது நடந்தது. முதல்முதலாக என்னை பார்த்தாய். அப்போது என்னுள் உடைந்த ஒன்றிரண்டு செல்கள் இன்று வரை ஒட்டிக்கொள்ளவேயில்லை. உன மஞ்சள் முகத்தில் பட்டு எனக்குள் தெறித்தன சூரியக்கதிர்கள். மொத்தமாய் ரத்தங்கள் காய்ந்துபோய்தான் அன்று வீடு திரும்பினேன்.
தினம் தினம் நான் உன்னை சந்திப்பது இங்குதான். என்னைப் போலவே அலைகளும் ஆர்வமாய் வந்துவிடுவதுதான் ஆச்சர்யம். உன் கவனத்தை திசை திருப்ப நான் சில முயற்சிகள் செய்ததுண்டு. ஆனால் எதன் மீதும் சில வினாடிகள் கூட நிலைக்காத உன் விழிகளை என்னவென்று சொல்வது நான். பேசாமல் உனக்கு எதிரில் கடலில் மூழ்கிவிடலாமா எனத் தோன்றும். ஆனால் முழுதாய் நீ கரையில் அமர்ந்திருக்க எந்த முத்தை தேடி நான் கடலில் குதிப்பது?
நீ கீறிச்சென்ற மண்துகள்களை நானும் போய் கீறிப்பார்த்திருக்கிறேன். உன்னைத் தொட்ட காற்றலைகளை ஓடிப்போய் தழுவியிருக்கிறேன். உன் கால்களை தொட்டு தன்னை கழுவிக்கொண்ட கடல் அலைகளை கைகளில் அள்ளியிருக்கிறேன். வெறும் உதிரங்களை சும ந்து கொண்டிருக்கும் என் இதயத்தில் உன்னையும் சுமக்க விரும்புகிறேன். மலர்களை நேசிப்பவன் உன்னையும் நேசிக்க விரும்புகிறேன்.
உன் நாணத்தில் ஒரு துளியேனும் சிகப்பு அதிகரித்திருந்தால் என்னையும் என் கடிதத்தையும் விரும்புகிறாய் என அர்த்தம். சம்மதம் என்றால் சொல்லிவிடு. மறுப்பை மட்டும் மனதிலேயே வைத்துக்கொள். நாளை மீண்டும் இந்த கடற்கரைக்கு வருவேன். என் மனதைப் போல் கொந்தளிக்கும் இந்த கடல் அலைகளை மட்டும் ரசித்துவிட்டு சென்றுவிடுவேன்.