1994 ம் வருடம். திருச்சி கல்லூரி ஒன்றில் பி எஸ் சி படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறையில் நானும் என் நண்பனும் ஊருக்கு செல்வதற்காக திருச்சியிலிருந்து பேருந்து மூலம் தஞ்சாவூர் வந்து அங்கிருந்து passenger train ல் ஊருக்கு போகலாம் என plan
தஞ்சாவூர் வந்து இறங்கி அங்கு காலியாக நின்றிருந்த trainல் ஜன்னல் இருக்கையில் உடைமைகளை வைத்துவிட்டு இறங்கி கொஞ்சம் தூரம் நடந்தோம். train புறப்படும் நேரத்தில் ஓடிச்சென்று தொற்றிக்கொண்டோம் . இருக்கைக்கு போன எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எங்கள் மூட்டை முடிச்சுகளை ஓரம் தள்ளிவிட்டு ஜன்னல் இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்தீர்கள் நீ மற்றும் இரண்டு பேர். ஒரு சினேகமான புன்னகையை வீசி எங்களை சமாதானப்படுத்தினாய்.
நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் படியோரம் வந்து நின்று கொண்டோம். மாலை நேர தென்றல் காற்று மனதை தழுவிச்சென்றது. எங்களது பேச்சில் உனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும் எங்களை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டாய். எஙகள் மீது உனக்கு ஏனோ ஆர்வம் வரத்தொடங்கியது. ஒருவேளை உன்னைப் போல ஒரு அழகானப் பெண்ணை புறக்கணித்துவிட்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததால் இருக்கலாம். அவ்வப்போது எழுந்து எங்கள் அருகில் வருவதும் போவதுமாக இருந்தாய்.
வானம் நிறமிழக்க தொடங்கியதும் நாங்கள் உள்ளே வந்து அமர்ந்தோம். வார்த்தைகளை எண்ணி பேசத்தொடங்கினோம். கும்பகோணம் ஜங்சன் தாண்டியபிறகு வார்த்தைகள் வேகம் பிடித்தது. நீ வல்லம் பொறியியல் கல்லூரியில் படிப்பதாக சொன்னாய். உடன் வந்திருப்பது உன் தோழி மற்றும் தோழியின் தாயார் என தெரிந்தது.
உன் தோழியும் இதில் கலந்துகொள்ள கலகலப்பாக நேரம் நகர்ந்தது. உன் பெரிய விழிகளை மேலும் பெரிதாக்கி நீ பேசியது அழகாய் இருந்தது. எல்லை மீறாத நம் உரையாடலை உன் தோழியின் தாயார் ரசித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது காரணமில்லாமல் ஒரு அமைதி தோன்றி மறைந்தது.
நேரம் போனதே தெரியவில்லை என்று சொல்லமுடியாது. நேரம் போனது தெரிந்தது. அதனால்தான் நாட்கள் பழகிய அனுபவம் அன்று கிடைத்தது. கடைசி வரை உன் பெயரை கேட்க மறந்துபோனேன். சிதம்பரம் வந்தபோது நாங்கள் தீடிரென விடைபெற்றது உனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால் கொள்ளிடத்தில் இறங்கவேண்டியவன் உனக்காகத்தான் சிதம்பரம் வரை வந்தேன் என்பது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.